கேள்வியின் நாயகனே

 


கேள்வியின் நாயகனே

 

இராமாயணத்தில் வாலியை பற்றி ஒரு விளக்கம்.  

 

இதிகாசங்களிலே சிறந்த இராமாயணத்திலே ஒரு முக்கியமான பாத்திரம் வாலி. அவனை ஶ்ரீராமன் மறைந்திருந்து கொன்றது சரியா? அவன் கொல்லப்பட வேண்டியவனா? இதைப் பற்றி ஓர் விவரணம்.

 

நாலு வேதமாம் நவை யிலார் கலி

வேலி யன்னதொன் மலையின் மேலுளான்

சூலி தன்னருள் துறையின் முற்றினான்

வாலி யென்றுளான் வரம்பிலா ற்றலான்

 

நான்கு வேதங்களையும் வேலியாக கொண்டு கிட்கிந்தையை ஆண்டு வருபவன் வாலி. அந்தணர்கள் மட்டுமே வேதம் பயில முடியுமாதலால் வேதம் கற்றவர்கள் ஓதவும் தான் செவியாற்கேட்டு வேத ஞானம் பெற்றவன் வாலி. கற்றலின் கேட்டலே நன்று ‘செல்வத்துட் செல்வம் செவிச் செல்வம் அச்செல்வம் செல்வத்துள் எல்லாம் தலை’ எனும் குறள் படி வாலி கேள்வி ஞானம் பெற்றதால் ‘கேள்வியின் நாயகன்’ என்று அறியப்படுகிறான்.

 

வாலி இந்திரனின் மைந்தன். சூரியனின் தேர்ப்பாகனான அருணண் என்பவன் ஓர் அழகிய பெண்ணாக வடிவெடுத்து இந்திரன் சபைக்கு சென்றான். இந்திரன் அந்த பெண்ணைக் கண்டு காமுற்று கூடினான். அப்போது பிறந்தவன் வாலி. சூரியனிடம் திரும்ப வந்த அருணண் நடந்ததை கூற, தான் பார்க்க மீண்டும் பெண்ணாகக் கேட்க அருணண் பெண்ணானான். அப்போது சூரியன் அவனுடன் கூட அப்போது பிறந்தவன் சுக்ரீவன். இதனால் வாலியும் சுக்ரீவனும் உடன் பிறந்தவராயினர்.

 

வாலி அஷ்ட மூர்த்தியாய் விளங்குகின்ற சிவபெருமானை வணங்கி அவரிடம் பேரன்பு பூண்டவன்.தன்னை எதிர்த்தோரின் வலிமையில் பாதியை கவரும் வரமும் சிவனால் பெற்றிருந்தான்


 

 



‘கிட்டு வார்பொரக் கிடைக்கின் அன்னவர்

பட்ட  நல்வரம் பாகம் எய்துவான்

எட்டு  மாதிரத் திறுதி நாளுமுற்று

அட்ட  மூர்த்தி தாள் பணியும் ஆற்றலான்

 

வாலி தன் வலிமையை பிறருக்கு தீங்கு இழைக்க பயன்படுத்தவில்லை. ஐம்பூதங்களையும், சூரிய சந்திரர்களையும் இயமானனையும் எட்டுத் திருமேனிகளாகக் கொண்டு எட்டு மூர்த்தமய் இருக்கின்ற சிவனை எட்டிப் பிடிப்பது போல் எட்டுத்திசைகளின் எல்லை வரை சென்று தினமும் வழிபட்டவன் வாலி.

 

ஞானசம்பந்தர் பாராட்டு

 

காவிரியின் வடகரையில் திருவடகுரங்காடுதுறை என்று ஒரு பாடல் பெற்ற தலம் இருக்கிறது. அங்கு வாலி சிவபெருமானை வழிபட்டு பூசை செய்தான் என்பது தலவரலாறு. ஞானசம்பந்தர் தமது ஞானக்கண்களால் கண்டு பாடலாகப் பாடுகிறார்.

 

கோலமா மலரொடு தூபமுஞ

    சாந்தமுங் கொண்டு போற்றி                                    

வாலியார் வழிபடப் பொருந்தினார்

      திருந்து மாங்கனி களுந்தி

ஆலுமா காவிரி வடகரை

      யடை குரங்காடுதுறை

நீலமா மணிமிடற் றடிகளை

      நினையவல் வினைகள் வீடே

 

தேவாரத்தில் பாராட்டப்பட வேண்டுமானால் வாலியின் சிறப்பை என்னவென்று சொல்வது. நறுமணம் கமழும் பல வண்ண மலர்களை தூவி, தூபம் காட்டி, சந்தனம் சாற்றி வாலி வழி பட அதனை சிவ பெருமான் பெரிதும் மனம் உவந்து ஏற்றுக்கொண்டார் என்று ஞான சம்பந்தர் நமக்குச் சொல்கிறார். ‘வாலியார் வழிபடப் பொருந்தினார்’ என்று ‘ஆர்’ விகுதி சேர்த்து பெருமையாக கூறுகிறார்.

 

அப்பர் புகழ்மாலை

 

ஞானசம்பந்தரைப்போல் அப்பரும் வாலியார் என்றே குறிப்பிட்டு திருவையாற்றில் வாலி வழிபட்ட அழகை வியந்தும் மகிழ்ந்தும் கூறுகின்றார்.

 

பீலிகை யிடுக்கி நாளும்

      பெரியதோர் தவமென் றெண்ணி

வாவிய தறிகள் போல

      மதியிலார் பட்ட தென்னெ

வாலியார் வணங்கி யேத்துந்

      திருவையா றமர்ந்த தேனோடு

ஆலியா வெழுந்த நெஞ்சம்

      அழகிதா வெழுந்த வாறே

 

இப்பேர்ப்பட்ட வாலி தன் மனைவி தாரை வந்து ‘ஶ்ரீராமன் தன் தம்பியுடன் உம் தமையனார்க்கு உதவ வந்துள்ளான் உமை அழிக்க’ என்று கூற அதற்கு வாலி உரைத்தது;

 

உழைத்த வல்லிரு வினைக்கூறு காண்கலாது

அழைத்தய ருலகனுக் கறத்தின் ஆறெலாம்

இழைத்தவற் கியல்பல இயம்பி என்செய்தாய்

பிழைத்தனை பாவியுன் பெண்மையால் என்றான்

 

முன்னதாக ஶ்ரீராமன் ஸீதையைப் பிரிந்து அவளைத்தேடி வரும் வழியில் அனுமனின் உதவியுடன் சுக்ரீவன் வாலிக்கு பயந்து மறைந்திருந்த இரலைக்குன்று செல்ல, ஶ்ரீராமரை உபசரித்த சுக்ரீவனிடம் அவன் மனைவி பற்றி கேட்கிறான். விருந்தினரை உபசரிக்க மனைவியுடன் இருத்தல் கடமையாதலால், அனுமன் ‘சுக்ரீவன் மனைவியை வாலி வைத்துக்கொண்டான்’ என பதில் கூறுகிறான்.

     

      உரிமையென்றிவற் குரிய தாரமாம்

      அருமருந்தையும் அவன் விரும்பினான்

      இருமையுந்துறந் தவனி ருந்தனன்

      கருமமிங்கிதே கடவுள் என்றனன்

 

பொய் சிறிதும் பேசும் வழக்கமில்லாத அனுமன் இவ்வாறு கூறவும், ஶ்ரீராமன் தன் மீது அன்பும் இரக்கமும் இல்லாது மாற்றாந்தாயாகிய கைகேயி சொன்னவுடன் அரச பாரத்தை தம்பி பரதனுக்கு கொடுத்து காடு வந்ததால் அன்பில்லாத தமையனொருவன் தன் தம்பியின் மனையாளை விரும்பினான் என்ற சொல் கேட்டு கடும் சினம் கொன்டான்.

 

      ஈரம் நீங்கிய சிற்றவை

            சொற்றன ளென்ன

      வாரம் வீங்கு தோள்

            தம்பிக்கு தன்னரசுரிமைப்

      பார மீந்தவன் பரிவில

            னெருவன்ற னிளையோன்

      தாரம் வவ்வின னென்றசொற்

            றரிக்குமா றளதோ

 

முதலில் விரும்பினான் என்று அனுமன் சொன்னான். பிறகு ‘வவ்வினான்’ என்றாகிவிட்டது. ‘விரும்புதல்’ வேறு. ‘வவ்வுதல்’ வேறு. இந்த மாறுபாட்டால் ஶ்ரீராமன் ‘வாலியை வென்று உன் நாட்டையும், மனைவியையும் மீட்டுத்தருவேன்’ என்று சுக்ரீவனிடம் கூறினான். அனுமனின் ஒரு சொல் மாற்றம் வாலியின் மரணத்திற்கு வித்தானது

     

ஶ்ரீராமனை சிறிதும் சந்தேகிக்காமல் வாலி தன்னை வலிய சண்டைக்கு இழுத்த சுக்ரீவனுடன் போரிடுகிறான். துவந்த யுத்தத்தில் வென்ற வாலி சுக்ரீவனை தன் தலைக்குமேல் உயர்த்தி தரையில் வீச முற்பட, ஶ்ரீராமன் வாலி மார்பு மீது அம்பு எய்கிறான். வாலி கீழே விழுந்து தன் மார்பில் தைத்த அம்பினை பிடுங்கிப் பார்க்க அதில் ஶ்ரீராமனின் பெயர் கண்டு திகைக்கிறான்.

 

இராமபாணம் வாலியின் உயிரைக் கவர்ந்தது என்று சொல்வதைவிட இராமன் செய்கையால் ஏற்பட்ட நாணமே அவனை வீழ்த்தியது. வாலி வெட்கத்தால் தலை குனிந்தான்;உரக்க சிரித்தான்;மீளவும் சிந்தித்தான்;இப்படியும் இருக்குமா என்று நினைத்தான். குழியில் அகப்பட்ட மதயானை போல துன்பப்பட்டு நிலைகலங்கித் தளர்ந்தான்.

 

 

 

      பிறர்பழியும் தம்பழியும் நாணுவார் நாணுக்கு

      உறைபதி என்னும் உலகு

என்ற குறளுக்கு வாலி ஒரு சிறந்த எடுத்துக்காட்டு.

 

கீழே வீழ்ந்து கிடக்கும் வாலியைக் காண இராமன் வருகிறான். வாலி அவனிடம் நியாயம் கேட்கிறான்.

 

 

      அரக்கரோ ரழிவு செய்து

            கழிவரே லதற்கு வேறோர்

      குரக்கினத் தரசைக் கொல்ல

            மனுநெறி கூறிற் றுண்டோ

      இரக்கமெங் குகுத்தா யென்பால்

            எப்பிழை கண்டா யப்பா

      பரக்கழி யிதுநீ பூண்டாற்

            புகழையார் பரிக்கற் பாலார்

பின்னும்

     

      கோவியற் றரும முங்கள்

            குலத்துதித் தோர்கட் கெல்லாம்

      ஓவியத் தெழுத வொண்ணா

            வுருவத்தா யுடைமை யன்றோ

      ஆவியைச் சனகன் பெற்ற

            அன்னத்தை யமிழ்தின் வந்த

      தேவியைப் பிரிந்த பின்னைத்

            திகைத்தனை போலுஞ் செய்கை

 

இராமன் வாலிக்கு மறுமொழியாக ‘தம்பியை ஓர் தந்தையாக வழி காட்டாது அவனையே கொல்லவும் துணிந்ததால் அரச நெறிகளின்படியே அவனை தண்டித்ததாக கூறுகிறான். மனித குலம் சாராத ஒருவரை தண்டிக்க ஶ்ரீராமனுக்கு என்ன அதிகாரம் என்ற கேள்விக்கு விடையில்லை.

 

வாலி வீழ்ந்த சேதி கேட்டு தாரை வந்து அவன் மார்பு மீது விழுந்து அரற்றுகிறாள்.

‘ஐயோ! இராமன் வீணாக இவ்வாறு மறைந்து நின்று கொன்றுவிட்டானே. அவன் நேரில் வந்து வாயால் ‘இது செய்’ என்று சொன்னால் என் கணவன் மறுக்காமல் செய்திருப்பானே. தன் வாழ்வைக் கூட தயங்காமல் கொடுத்திருப்பானே! என்று கதறுகிறாள்.

 

      ஓயா வாளி ஒளிந்துநின் றெய்துவான்

      ஏயா வந்த இராமன் என்றுளான்

      வாயால் ஏயினன் என்னின் வாழ்வெலாம்

      ஈயா யோவமிழ் தேயும் ஈகுவாய்

 

வாலி தேவர்களுக்கு அமுதம் கடைவதில் உதவியவனாயிற்றே! என்கிறாள் தாரை.

 

அங்கதன் வருகிறான். அவனையும் சுக்ரீவனையும் வாலி இராமனிடம் ஒப்படைத்து ‘இவர்களைக் காக்க’ என்று கேட்டுக்கொள்கிறான். இராமனும் அங்கீகரித்து வாலிக்கு அருட்கருணை புரிகிறான்.

 

வாலி மறைந்தபின் சுக்ரீவன் இராமனை கிட்கிந்தை அழைத்த போது ‘நான் என் மனைவியைப் பிரிந்து  காட்டில் வருந்திக்கொண்டிருக்கும் வேளையில் வில்லறமாகிய போரின் தருமங்களை மீறி, மறைந்து நின்று வாலியினைக் கொன்ற பாவங்கள் தொலையும் பொருட்டுக் காட்டிலிருந்தே கடுந்தவம் செய்யப்போகிறேன்’ என்கிறான்.

 

      இல்லறந் துறந்தி லாதோர்

            இயற்கையை யெதிர்ந்து போரின்

      வில்லறந் துறந்து வாழ்வேற்

            கின்னன மேன்மை யில்லாச்

      சில்லறம் புரிந்து நின்ற

            தீமைகள் தீரு மாறு

      நல்லறந் துறந்த நோன்பின்

            நவையற நோற்பல் என்றான்

 

மறைந்து நின்று வாலியைக் கொன்றதை இலக்குவன் கடிந்து கூற, அதற்கு இராமன் கூறியது;

‘இவ்வுலகில் உண்மையுடையவர்கள் ஒரு சிலரே, பெரும்பாலோர் பொய்மையுடன் வாழ்கின்றனர். நமக்கு வேண்டிய நன்மை என்ன என்று பார்த்துக்கொண்டு மற்றவைகளை விலக்க வேண்டும். அதுவுமின்றி குற்றமேயில்லாதவர்கள் என்று சொல்ல உலகில் யாரும் இல்லை. மறுவில்லாத உத்தமன் இந்த உலகத்தில் ஏது, இருக்கவே முடியாது’ என்ற உண்மையை இராமன் மூலமாக கம்பர் கூறுகிறார்.

 

இந்த ஒரு குற்றம் செய்ததாலேயே இராமன் மனிதனாகி நம்மால் புரிந்து கொள்ளக்கூடிய நம்பியாகிறான். இல்லாவிடில் அவன் தெய்வமாகி நம்மால் தொடமுடியாத தொலைவிற்குப் போயிருப்பான்.

 

கேள்வியின் நாயகனே; ‘நான் என்ன குற்றம் செய்தேன்’ என்ற உன் கேள்விக்கு பதிலேதய்யா

 


ஆக்கமும் பதிவும்;


 

சேதுமாதவன் வெங்கட்ராவ்

கோவை

 


Comments

Popular posts from this blog

Business and Career - An Astrological perspective

காதலும் திருமணமும் - ஜோதிட பார்வை

Love and Marriage - Astrological views