வியாஸரின் மகாபாரதம் - விரிவான விளக்கம் பகுதி 1

 


மாதா பிதா குரு தெய்வத்திற்கு சமர்ப்பணம்

யதா யதாஹி தர்மஸ்ய க்லானிர் பவதி பாரத
அப்யுக்தானம் அதர்மஸ்ய ததாத்மானம் ஸ்ருஜாம்யஹம்

அன்புடையீர்

இந்த பரந்த பாரத நாட்டில் பிறந்தோர் எங்கிருந்தாலும் மகாபாரதத்தையும் இராமாயணத்தையும் தங்கள் வாழ்க்கையின் ஒரு அங்கமாக கருதுகிறார்கள். மிகப்பெரும் தர்ம சீலர்கள் ஆண்ட பெருமையினை உடையது மகாராஜா துஷ்யந்தருக்கும் சகுந்தலைக்கும் பிறந்த பரதனின் பெயரால் அழைக்கப்படும் இந்த பரத கண்டம்.

மிக புண்யமான இந்த இரு காவியங்களில் வாழ்வியல் நெறியை நமக்கு எடுத்துச் சொல்வது மகாபாரதம். நாம் இதுவரை அறிந்திருக்கும் மகாபாரதக் காவியம் மகாராஜா சந்தனு காலத்தில் துவங்கி யுத்தத்துடன் முடிகிறது. அதற்கு முந்தைய பிந்தைய நிகழ்வுகள் அனைவரும் அறிந்திருக்க வாய்ப்புக்கள் குறைவு என்றே கருதுகிறேன். மஹா ஞானி ஶ்ரீவேத வியாஸ மகரிஷியால் கூறப்பட்டு முழு முதற்கடவுளான  விநாயகரால் எழுதப்பட்ட இந்த பாரதம் அறுபது லட்சம் பதங்களைக் கொண்டது. இதில் முப்பது லட்சம் பதங்கள் தேவர்களுக்கும் பதினைந்து லட்சம் பிதிர் வர்க்கம் எனும் முன்னோர்களுக்கும் பதினான்கு லட்சம் ராட்சஸர்களுக்கும் மீதமுள்ள ஒரு லட்சம் மணிதர்களுக்கும் உரித்தாயிற்று. 

ஶ்ரீவேத வியாஸ மகரிஷி இதனை தம்முடைய மகனான சுகர் மகரிஷிக்கும் சீடரான வைஸம்பாயனருக்கும் உபதேசித்தார். வைஸம்பாயன மகரிஷி இதனை மகாபாரதத்தின் அபிமன்யுவின் மகன் பரீக்ஷித்து மஹாராஜாவின் மகனான ஜனமேஜயர் எனும் ராஜரிஷிக்கு விஸ்தாரமாக உரைத்தார்.






மகாபாரதமென்னும் இந்தக் காவியத்தில் வேதத்தின் ரகஸியமும் சீஷை, வியாகரணம், சந்தஸ், நிருத்தம், ஜோதிஷம், கல்பமென்னும் ஆறு வேதாங்கங்களும், உபநிஷத்துக்களும் அடங்கிய வேதங்களைத் தெளிவாகச் சொல்வதும், இதிஹாஸ(சிருஷ்டி, பிராயம், வம்ஸம், மன்வந்தரம், வம்ஸத்தின் சரித்திரங்கள்)  புராணங்களின் விரிவும் சுருக்கமும், சென்றது, நடப்பது, வருவதுமாகிய மூன்று காலங்கள், மூப்பு, இறப்பு, பயம், வியாதி, உற்பத்தி, நாசம் இவற்றின் நிச்சயமும், அநேக விதமான தர்மங்களின் இலக்கணமும், நான்கு வருணங்கள், எல்லாப் புராணங்கள், தவம், பிரமசரியம் இவைகளின் முறையும், பூமி, சூரியன், சந்திரன், அங்காரகன் முதலான கிரகங்கள், அசுவினி முதலான நட்சத்திரங்கள், தாரைகள்(மற்ற நட்சத்திரங்கள்), யுகங்கள் இவைகளின் அளவும், ரிக், யஜுர், சாம வேதங்களும், அவற்றிலுள்ள ஆக்ம ஞான பாகமும், தர்க்க ஸாஸ்திரப் பயிற்சியும், வைத்திய சாஸ்திரமும், ஞானமும், தேவ மனுஷ்ய ஜாதிகளும் அவ்வவற்றின் அநேக காரணங்களும், புண்ணிய தீர்த்தங்கள், புண்ணிய தலங்கள், கடல்கள், நகரங்கள், அஸ்திர விதிகள், தேவர்களுடைய கல்பங்கள் (பல யுகங்கள்) இவைகளும் யுத்தப்பயிற்சியும், பேசுகிற விதங்களின் வேறு பாடுகளும், உலக நடை முறையும், ஸர்வ வியாபியான(எங்கும் நிறைந்திருக்கும்) வஸ்து எதுவோ அதுவும் சொல்லப்பட்டிருக்கின்றன.




புண்யமான இந்த சரித்திரத்தை என்னால் இயன்ற வரையில் விரிவாக கூற முயற்சிக்கிறேன். பதினெட்டு பர்வங்களைக் கொண்ட இந்த பாரதம் நூற்றுக்கு மேற்பட்ட உப பர்வங்களைக் கொண்டுள்ளது. பகவான் ஶ்ரீகிருஷ்ணர் அருளிய பகவத் கீதை மத்திம பாகத்தில் இடம் பெறுகிறது.

மகா அற்புதமான இந்த காவியத்தை படிப்பதும், கேட்பதும், சொல்வதும் இறைவனிடம் நமது பக்தி மூலமாக சரணாகதி அடைந்து இம்மைக்கும், மறுமைக்கும் பயன் தரவல்லது.

இந்த மேலான சரித்திரத்தை எழுத ஆத்ம பலத்தையும் சரீர பலத்தையும் மூல முதற் கடவுளான உச்சிஷ்ட மகா கணபதியும் பரம்பொருளான ஶ்ரீகிருஷ்ணரும் அருள அவர்களிடம் சரணாகதி அடைகின்றேன்.

இதனை எழுதுவதற்கு மானசீகமாக தன்னுடைய ஆசிகளை வழங்கி என்னுடன் எப்பொழுதும் இருக்கின்ற என் குருஜி திருப்பூர் ஶ்ரீ செ. கோபால கிருஷ்ணன் அவர்களின் பாதங்களில் இதனை சமர்ப்பிக்கின்றேன்.


ஆக்கமும் உரிமையும்;

சேதுமாதவன் வெங்கட்ராவ்
சென்னை, தமிழ்நாடு. இந்தியா.
+91 8838535445/9962859676
veeyes55@yahoo.in


Comments

Popular posts from this blog

ஜோதிட கருத்துக்கள் - பிற ஆசிரியர்கள்

சாணக்யன் கூறும் அறம்

Kala Purusha - The Cosmic Man and his basic Impulses