மாதா பிதா குரு தெய்வத்திற்கு சமர்ப்பணம்
ஓம் அக்ஞான-திமிராந்தஸ்ய க்ஞானாஞ்ஜன-ஷலாகயா
சக்ஷுர் உன்மீலிதம் யேன தஸ்மை ஶ்ரீ-குரவே நம;
நான் அறியாமையின் இருளில் பிறந்தவன்,
எனது கண்களை ஞான ஒளியால் திறந்த ஆன்மீக குருவிற்கு எனது வணக்கங்களைச் சமர்ப்பிக்கின்றேன்.
அன்புடையீர்,
முந்தைய இரு பதிவில் வேத மஹரிஷி ஶ்ரீவியாஸர் அருளிய
மகாபாரதத்தின் உருவாக்கம் பற்றியும் அது கூறும் கால பிரமாணங்களைப் பற்றியும் அறிந்து
கொன்டோம். இந்த பதிவில் பிரபஞ்சம் உருவானதை பற்றி ஶ்ரீவியாஸர் கூறுவதைப் பார்ப்போம்.
‘இவ்வுலகம்
பிரகாசமில்லாமலும் அறிவில்லாமலும் எங்கும் இருளால் மூடப்பட்டுமிருந்தபோது, பிரஜைகளின்
வித்தாகவுள்ளதும் அழிவில்லாததுமாகிய ஒரு (முட்டை) அண்டம் உண்டாயிற்று. பெரியதும் அற்புதமுமான
அந்த அண்டத்தை யுகங்களுக்கு ஆதி காரணமென்று சொல்லுகின்றனர். சத்தியமும், பிரகாசமானதும்,
அழியாததும், ஆச்சரியமும், நினைத்ததற்கரியதும், எல்லாவற்றிலும் ஒரே தன்மையாக இருப்பதும்,
வெளிப்படாததும், எல்லாவற்றுள்ளும் பிரவேசத்திருப்பதும், ஜடங்களும் ஜீவன்களும் தானாக
இருப்பதுமாகிய பிரம்மமானது, அந்த அண்டத்தில் வேதங்களினால் அறியப்படுகிறது. அந்த அண்டத்தில்
பிரஜைகளைப் படைக்கின்றவரும், சக்தியுள்ளவருமாகிய (முதல்) பிரம்ம தேவர் அவதரித்தார்.
தேவர்களுக்கெல்லாம் பிதாவாகிய பிரம்மாவும் ஸ்தானுவும்,
பிரம்ம புத்திரரான ஸ்வாயம்புவ மனுவும், பிரசேதஸின் புத்திரராகிய தஷரும், தஷருடைய புத்திரர்கள்
ஏழு பேரும், மரீசி, அத்திரி, ஆங்கிரஸ், புலஸ்தியர், கிரது, புலகர், வசிஷ்டர் முதலான
ஸப்த ரிஷிகளும், பதினான்கு மனுக்களும் ஆகிய மொத்தம் இருபத்தியொரு பிரஜாபதிகளும் உன்டானார்கள்.
எல்லா ரிஷிகளாலும் அறியப்பட்டவனும், அறிதற்கரிய ஸ்வரூபமுள்ளவனுமாகிய விராட் புருஷனும்,
விசுவ தேவர்களும், யக்ஷர்களும், ஸாத்தியர்களும், பிசாசர்களும், யக்ஷர்களின் ஒரு பிரிவான
குஹ்யகர்களும், பிதிர் தேவதைகளும் பிறந்தனர். பிறகு எல்லா குணங்களும் நிரம்பியவர்களும்,
வித்வான்களும், சிஷ்டர்களும், சிரேஷ்டர்களுமான அனேக மஹரிஷிகளும் உண்டானார்கள். நீர்,
மேலுலகம், பூமி, வாயு, இடைவெளி, திசைகள், வருஷங்கள், ருதுக்கள், மாதங்கள், பக்ஷங்கள்,
பகலிரவுகள், இவை முறையே உண்டாயின. இன்னும் உலகத்திற் காணப்படுகின்ற தாவரங்களும், ஜங்கமங்களுமாகிய
மற்ற எல்லாப் பொருட்களும் உண்டாயின. யுகங்கள் முடிவிற்கு வரும்போது அவையெல்லாம் மறுபடி
அழிக்கப்படுகின்றன. இந்த விதமாக ஆதியும் அந்தமுமில்லாததும் பஞ்ச பூதங்களின் சேர்க்கையாகிய
பிரபஞ்சத்திற்கு காரணமுமான இந்தக் காலச்சக்கரமானது ஆரம்பமும், முடிவுமில்லாமல் சுற்றிக்கொண்டே
இருக்கிறது. முப்பத்து மூன்று ஆயிரங்களும், முப்பத்து மூன்று நூறுகளும், முப்பத்து
மூன்றுமாகத் தேவர்களின் சிருஷ்டி அறிவிக்கப்பட்டிருக்கிறது. திவஸ்புத்திரன், ப்ருஹத்பானு,
சக்ஷு, ஆத்மா, விபாவஸு, ஸவிதா, ரிசீகன், அர்க்கன் பானு, ஆசாவஹன், ரவி என்பவர்கள் சூரியனுடைய
புத்திரர்கள். இவர்களுக்குப்பின் தோன்றியவர் மஹ்யர் என்னும் வைவஸ்வத மனு. தேவ ப்ராட்
என்பவர் அந்த மனுவின் புத்திரர். தேவப்ராட்டின் புத்திரர் ஸுப்ராட். தசஜ்யோதி, சதஜ்யோதி,
ஸஹஸ்ரஜ்யோதி என்ற மூன்று பேர்கள் ஸுப்ராட்டின் புதல்வர்கள். மகாத்மாவாகிய தசஜ்யோதிக்கு
பதினாயிரம் புத்திரர்கள் உண்டானார்கள். அதற்கு பத்து மடங்காக சதஜ்யோதியின் புத்திரர்கள்.
அதற்கு மேல் இன்னும் பத்து மடங்காக ஸஹஸ்ரஜ்யோதியின் புத்திரர்கள். அவர்களிடமிருந்துதான்
இந்தக் குரு வம்சமும், யது வம்சமும், பரதவம்சமும், யயாதி வம்சமும், இக்ஷுவாஹு வம்சமும்
இன்னும் அநேக ராஜரிஷி வம்சங்களும், மிக விரிவான பிராணி சிருஷ்டிகளும் உண்டாயின. பிராணிகளிருக்குமிடமனைத்தும்,
ஜனனம், மரணம் வினைப்பயனாகவும், வேதமும், யோகமும், ஞானமும், தர்மார்த்த காமங்களும்,
அவற்றைப்பற்றிய பற்பல சாஸ்திரங்களும், உலக நடையின் ஒழுங்குமாகிய எல்லாவற்றையும் வியாஸ
மஹரிஷி கண்டறிந்தார்’.
பரத வம்சத்தினுடைய ராஜ்ய தந்திரமும், அபிவிருத்தியும்,
சரித்திரங்களும், உபாக்கியானங்கள் எனும் கிளைக்கதைகளும், அநேக விதங்களான வேதாந்தங்களுமாகிய
இதிகாச கிரந்தத்தினுடைய லட்சணம் முழுவதும் இந்த அத்யாயத்தில் வரிசைப்படுத்திக்கூறப்பட்டுள்ளன.
இந்த அளவிட முடியாத ஞானத்தை வியாஸ மஹரிஷி சுருக்கியும், விரித்தும் சொன்னார்.
மகா பாரதம் இன்னும் விரிவடைகிறது.
இந்த மேலான சரித்திரத்தை எழுத ஆத்ம பலத்தையும் சரீர பலத்தையும் மூல முதற் கடவுளான உச்சிஷ்ட மகா கணபதியும் பரம்பொருளான ஶ்ரீகிருஷ்ணரும் அருள அவர்களிடம் சரணாகதி அடைகின்றேன்.
இதனை எழுதுவதற்கு மானசீகமாக தன்னுடைய ஆசிகளை வழங்கி என்னுடன் எப்பொழுதும் இருக்கின்ற என் குருஜி திருப்பூர் ஶ்ரீ செ. கோபால கிருஷ்ணன் அவர்களின் பாதங்களில் இதனை சமர்ப்பிக்கின்றேன்.
ஆக்கமும் உரிமையும்;
சேதுமாதவன் வெங்கட்ராவ்
சென்னை, தமிழ்நாடு. இந்தியா.
+91 8838535445/9962859676
veeyes55@yahoo.in
Comments
Post a Comment