தொழில் மற்றும் வணிகம் - ஜோதிடத்தின் முன்னோக்கிய பார்வை

 தொழில் மற்றும் வணிகம்

‘பணம் குதிரையை வேகமாக ஓடச் செய்யும்’ – திரு. ஜார்ஜ் கோல்மன் ஜூனியர் என்பவர் திரு ஸ்டீபன் ஸ்டோரேஸ் என்பவரின் இசை நாடகத்திற்காக எழுதிய பாடலில் வரும் ஒரு பழமொழி இது. அதிக பணம் கொடுத்தால் மக்கள் உங்களுக்கு வேலை செய்ய வருவார்கள் என பணத்தின் தேவையை, அதனால் கிடைக்கும், உணவு, அழகிய உடைகள், ஆடம்பர வாழ்க்கையை விரும்புவதை சொல்கிறது. பணம் வைத்திருப்போர் மதிப்பு, கௌரவம், அதிகாரம் செய்யும் திறனைக் கொன்டவர்களாக விளங்குகிறார்கள். ஆனால் ஞானிகளோ செல்வத்தை ஒதுக்கி பரம்பொருளை, முக்தியை அடையுங்கள் என அறிவறுத்துகிறார்கள். ஆனால் மனிதர்களுக்கு இந்த பொருளாதார உலகில் பணமே வலிமையானது, ஒருவரின் அந்தஸ்தை எடுத்துக் காட்டுவது என்பதால்  அதனை எந்த வழியிலாவது -நேர்வழியிலோ, குறுக்கு வழியிலோ – சம்பாதித்து, சேர்க்க ஆசைப்படுகிறார்கள்.

மேலே சொன்னது போல், பணம் சம்பாதிக்க பல வழிகள் உள்ளன. அதில் வாணிபமும், தொழிலும் பணம் ஈட்டுவதில் கௌரவமான முறையாக கருதப்படுகின்றன.

வணிகம் என்பதும் தொழிலும் பொதுவாக பாரம்பரியமாக, வழி, வழியாக வருவதை குறிக்கிறதே தவிர, அறிவு சார்ந்தனவற்றையோ, விஞ்ஞான பரிமாற்றங்களையோ, கற்பதையோ குறிப்பிடுவதல்ல. வியாபாரம் என்பது அடுத்தவரின் பணத்தையோ, செல்வத்தையோ உபயோகித்துக்கொள்வது அல்லது அனுபவிப்பது என்று ஹாஸ்யமாக குறிப்பிடப்படுவது உண்டு. வியாபாரம் இந்த நாகரீக உலகின் மக்களின் அத்தியாவசிய, ஆடம்பர தேவையை பூர்த்தி செய்வதற்கும் ஒரு நாட்டின் வருமானத்தை, பொருளாதார தேவைகளை பெருக்குவதிலும் உதவுகிறது. இத்தகைய வியாபாரத்தின் லாபம் பல காரணிகளை – முதலீடு, விற்கும் பொருளின் தன்மை (எளிதில் அழுகக்கூடிய/அழுகாத), விலையின் ஏற்றத்தாழ்வுகள், சந்தையில் பொருளின் இருப்பு (Demand and Supply, Supply Chain management), பொருட்களின் பின்னணியில் செயல்படும் மூளைத்திறன், விற்பனை யுக்திகள், அரசியல் மற்றும் பொருளாதார குறுக்கீடுகள், போன்றவற்றைச் சார்ந்து உள்ளது.




வியாபாரத்தில் உங்களுக்குச் சிறந்த மன வலிமை, புத்திசாலித்தனம் மற்றும் ஆழ்ந்த அறிவு, உடனடியாக முடிவெடுக்கும் திறன் மற்றும் அதிகாரம், போன்ற வெற்றிக்குத் தேவையான அனைத்தும் இருந்தாலும், இதனுடன் முக்கியமான ‘யோகம்’ என்னும் ‘அதிர்ஷ்டம்’ இணைந்திருக்கவில்லை என்றால் உங்கள் வெற்றி வெறும் பூஜ்யமே. இந்த உலகில் புத்திசாலித்தனம், (மன, ஆள், அதிகாரம் அரசியல்)  பலம், அதிர்ஷ்டம் மூன்றும் தான் பலமானவை. புத்திசாலித்தனம், பலம் என்ற இரண்டு துடுப்புகள் நீங்கள் செலுத்தும் படகில் உங்கள் கைகளில் இருந்தாலும், கடலில் செல்லும் போது எதிர்த்து வரும் சூறாவளிக் காற்றில் படகு கவிழாமல் இருப்பதற்கும், கவிழ்ந்தாலும் மீண்டு கரை சேர்வதற்கும் ‘அதிர்ஷ்டம்’ உங்களுக்கு துணை நிற்க வேண்டும்.

நாம் இப்போது ஜோதிட ரீதியாக வெற்றிகரமாக வியாபாரம் செய்து, லாபம் ஈட்டி, செல்வம் சேர்ப்பது பற்றி பார்ப்போம்.

வணிகம், தொழில் இரண்டையும ஊக்குவிக்கும் முதலிடத்தில் நீர் வீடுகளான கடகம், விருச்சிகம், மீனம் போன்றவைகளும் அவற்றிற்கு 7ம் நில வீடுகளான மகரம், ரிஷபம், கன்னி இரண்டாம் இடத்திலும், காற்று வீடுகளான மிதுனம், துலாம், கும்பம் மூன்றாம் இடத்திலும், நெருப்பு வீடுகளான மேஷம், சிம்மம், தனுசு வீடுகள் நான்காம் இடத்திலும் இருக்கின்றன. சுப கிரகங்கள் நில வீடுகளில் இருக்கும்போது வியாபாரம் செய்யும் எண்ணத்தை ஊக்குவிக்கின்றன. லக்னாதிபதி, 5ம் அதிபதி, 7ம் அதிபதிகளும் அவர்கள் அமர்ந்த திரேக்கானங்களும் அதைத் தீர்மானிக்கின்றன.

சர வீடுகளுக்கு 5ம் வீடு வேகமாக முடிவெடுக்கும் திறன், அதனைச் செயல் படுத்துவது குறிப்பாக வாங்குவது, விற்பது, அதற்குத் தேவையான முதலீட்டினை ஏற்பாடு செய்வது போன்றவற்றில் பரபரப்பாக இயங்கினாலும், அதீத கற்பனையாலும், சரியான முன் யோசனையின்றி செயல்படுவதாலும் (5ம் இடம் – கற்பனை,) வியாபாரத்தில் பெரும் ஏற்ற, இறக்கங்களைச் சந்திக்க வேண்டி வரும்.

ஸ்திர வீடுகள் 5ம் வீடுகளாக அமையும் போது அவை வியாபாரம் செய்வதில் விருப்பமோ, அக்கறையோ காட்டுவதில்லை. வியாபாரத்தை ஊக்குவிக்கும் பலமான கிரகங்கள் 5ல் சுபபலம் பெற்ற கிரகங்களின் பார்வையில் அமரும் போது வியாபாரத்தில் ஈடுபாடு காட்டுகின்றன.

5ம் வீடு உபய லக்னங்களாக அமையும் போது, வியாபாரம் பற்றிய எண்ணங்கள் ஊசலாட்டமாகவே அமைகின்றன. மீன ராசி நீர் வீடாகவும் அமைந்து, உபய லக்னமாகவும் வருவதால், இது 5ம் வீடாக வரும் போது தயக்கம், தாமதம், ஒரு உறுதியான முடிவு எடுக்கும் திறன் இல்லாமல் நல்ல வாய்ப்புகளை இழக்கிறார்கள். எனவே நீர் வீடுகள் 5ம் இடமாக அமையும் போது, சுப கிரகங்களின் பார்வை, சேர்க்கை இல்லை என்றால் அது வியாபாரத்தில் லாபம் கிடைப்பதாக கற்பனையையும், தோற்றத்தையும் மட்டுமே தரும். ஆனால் உண்மையில் லாபம் இருக்காது. விதி விலக்காக, நீர் வீடான கடகத்திற்கு 5ம் வீடான விருச்சிகத்தின் அதிபதி செவ்வாய் சிறந்த வியாபார திட்டங்களுக்கான ஆலோசகராக (திட்டங்களை செயல்படுத்துவதை விட) செயல் படுகிறார்.

பொதுவாக 2ம் இடம் குடும்பம், செல்வம் போன்றவற்றைக் குறித்தாலும், அதைத் தக்க வைக்க வேறு வீடுகளும் உதவுகின்றன. இதில் திரிகோணமாக விளங்கும் 9ம் வீடு முக்கியமாகும். 10ம் வீடு தொழில் அல்லது வருமானம் வரும் வகையைக் குறிக்கிறது. 1, 5, 9 ம் திரிகோண வீடுகள் ஒரு முக்காலி போல் ஒரு ஜாதகரின் வாழ்க்கை பலத்தை காட்டுகின்றன. 11ம் வீடு லாபஸ்தானமாக அமைந்து, 5ம் வீட்டிற்கு நேர் 7ல் 5ம் வீட்டின் பார்வை பெறுகிறது. 5ல் அமர்ந்த சுப கிரக பார்வை 11ம் வீட்டை வலிமையுடையதாக்கி நல்ல யோகத்தை உயர்த்துகிறது. 8ம் இடம் திடீர் அதிர்ஷ்டம், லாட்டரி, ரேஸ், தான, வாரிசற்ற செல்வம் போன்றவற்றைத் தருகிறது. 8ல் நின்ற சுப கிரகம் ஜாதகருக்கு இப்படிப்பட்ட யோகத்தைத் தருகிறது. இருப்பினும் இத்தகைய யோகங்களுக்கு, குரு சுப பலம் பெற்று நல்ல இடங்களில் அமர்ந்திருக்க வேண்டும்.

மீண்டும் ‘அதிர்ஷ்டத்தின்’ பக்கம் நமது கவனத்தைத் திருப்புவோம். இது நமது முற்பிறவியில் செய்த ஒரு கர்ம வினையாக நமது தந்தையின் மூலம் மரபுரிமையாக இந்த பிறவியிப் பெற்றுள்ளோம். எனவே 9ம் இடம் தந்தையையும், ‘அதிர்ஷ்டத்தையும்’ குறிக்கிறது. நாம் இப்பிறவியில் செய்யும் ‘சஞ்சித கர்மா’ இந்த பிறவியில் நாம் நல்ல குழந்தைச்செல்வம் பெறும் 5ம் இடமாக செயல் படுகிறது. 9ம் இடம் விதியாக செயல்படுகிறது. ஒரு மனிதனின் வாழ்க்கை, தன் செயல், தன் விருப்பம், தனது விதி மூன்றும் சேர்ந்த ஒன்றாக லக்னம், 5ம் இடம், 9ம் இடம் மூன்றும் சேர்ந்த இயக்கமாக உள்ளது.

ஜாதகத்தில் 10ம் பாவம் ஒருவரின் தொழில், அந்தஸ்து, அதிகாரம், கௌரவம், மற்றும் புகழைக் குறிக்கிறது. சூரியன், புதன், குகு, மற்றும் சனி, இதனைக் குறி காட்டும் காரக கிரகங்களாகும்.  10ல் அமர்ந்த கிரகங்கள், 10ம் இடத்தைப் பார்த்த கிரகங்கள், நவாம்சத்தில் 10ம் இடத்து அதிபதி நின்ற இடம், 10ம் வீட்டினை சுட்டிக் காட்டும் காரக கிரகங்களே ஒருவரின் தொழில் மற்றும் வியாபாரத்தைச் சுட்டிக் காட்டுகின்றன.




காற்று ராசிகளான மிதுனம், துலாம், மற்றும் கும்பம் மனம் சார்ந்த, அறிவு சார் நாட்டம், திட்டமிடல், மற்றும் பேச்சாற்றலைக் குறிக்கிறது. நீர் ராசிகளான கடகம், விருச்சிகம், மற்றும் மீனம் திரவங்கள், நீர், ஆடை வடிவமைப்பு, மருத்துவ மனைகள், கடல் மற்றும் வான் வழிகாட்டுதல்கள், மற்றும் கடல் சார் தொழில்களைக் குறிக்கிறது. நெருப்பு ராசிகளான மேஷம், சிம்மம், மற்றும் தனுசு வெப்பம் சார்ந்த, இரும்பு, உலோகங்கள், அறுவை சிகிச்சை, மற்றும் தொழிற்சாலைகள் சார்ந்த தொழில்களைச் சுட்டிக் காட்டுகிறது. நில ராசிகளான ரிஷபம், கன்னி, மற்றும் மகரம் வியாபாரத்தையும், பொறுமை, நடைமுறைக்கேற்ற செயல் திறன், வேலையையும் குறிக்கிறது.

தொழிலில் கௌரவம், அந்தஸ்து, மற்றும் புகழ்.

·       சுப கிரகங்களின் சேர்க்கை அல்லது பார்வை பெற்ற 10ம் வீடு மற்றும் அதன் அதிபதி தொழிலில் சிறந்த அந்தஸ்து, மதிப்பு, மற்றும் உயர் நிலையைத் தருகிறார்.

·       தர்ம, கர்மாதி யோகம் பெற்ற கிரகங்கள் (9ம் அதிபதி 10ல், 10ம் அதிபதி 9ல்) பரிவர்தனை பெறும் போது, ஜாதகர் உயர்ந்த புகழ், அந்தஸ்து, மற்றும் கௌரவம் அடைகிறார்.

·       10ல் அமர்ந்த சூரியன் அல்லது செவ்வாய். ஜாதகரை அதிகாரம் மிக்க உன்னத பதவிக்கு உயர்த்துகிறார்.

·       5ம் இடத்து அதிபதியும், 10ம் இடத்து அதிபதியும் அவரவர்களது சுய வீட்டில் அமர்ந்திருந்தால் ஜாதகர் உயர்ந்த அந்தஸ்து உள்ள பதவியில் இருப்பார்.

·       லக்னாதிபதியும், 9ம் இடத்து அதிபதியும் பரிவர்தனை பெற்று அமர்ந்து இருந்தால் ஜாதகர் புகழ் பெற்றவராகவும், மிக உயர்ந்த அந்தஸ்து பெற்றவராகவும் இருப்பார்.

மாறாக, துர்ஸ்தானங்கள் எனப்படும் 6, 8, அல்லது 12ம் வீட்டில் 10ம் வீட்டு அதிபதி அமர்ந்து இருந்தால், அவர் எப்போதும் உயர் பதவி அடைய முடியாது. அவர் நோயால் பாதிக்கப்பட்டவராகவும், அதிகமான எதிரிகள் உள்ளவராகவும் இருப்பார்.


ஆக்கமும் பதிவும்;

சேதுமாதவன் வெங்கட்ராவ்

சென்னை

தமிழ்நாடு, இந்தியா

+919962859676

ssssethu@gmail.com

Comments

Popular posts from this blog

Business and Career - An Astrological perspective

காதலும் திருமணமும் - ஜோதிட பார்வை

Uranus, Neptune and Pluto