அரவமும் ஆராதனையும்
அரவமும் ஆராதனையும்
நாம் பொதுவாக பாம்பினை சர்ப்பம், நாகம் என்று அழைத்தாலும் அரவம் என்ற சொல்லே பரவலாக தமிழ் பயன்பாட்டில் உள்ளது. எனவே அதனை நான் இங்கே கையான்டிருக்கிறேன்.
நவகிரகங்களில் மிகவும் வலிதானதாக ராகு, கேதுக்களே கருதப்படுகின்றன. இத்தகைய பாம்பினை பல சமயத்தாரும் வழிடடிருக்கின்றனர், வழிபடுகின்றனர் என்பது உண்மை.
தமிழ்நாட்டில் மதுரைக்கு எல்லை வகுத்து 'ஆலவாய்' என்ற பெயர் வரக்காரணமாக இருந்ததும் ஒரு பாம்பே.
சைவ சமயத்திலும், கர்நாடகத்திலும் பாம்பு வழிபாடு மிகச் சிறப்பாகவே கொண்டாடப் படுகிறது. சிந்து சமவெளியில் கிடைத்த முத்திரைகளில் பாம்பு பூஜைக்குரிய பொருளாக பொறிக்கப்பட்டுள்ளது.
பழைய தமிழ் நூல்களில் நாகர்கள் என்ற ஓர் இனத்தார் நாகத்தீவு என்ற இடத்தில் வாழ்ந்ததையும் அவர்களின் வடிவங்களை கோவில்களில் சிற்பங்களாக வடிக்கப்பட்டுள்ளதையும் குறிப்பிடுகின்றன.
பாம்புகள் 8
அனந்தன், வாசுகி, தக்கன், சங்கபாலன், குளிகன், பதுமன், மகாபதுமன், கார்க்கோடன்.
பாதாள உலகத்திலுள்ள நாக லோகத்தின் தலைவன் ஆதிசேடன். அனைவருக்கும் முதலாமவன். வாயுவை எதிர்த்தவன். இலக்குவனாகவும், பலராமனாகவும், பதஞ்சலி முனிவராகவும் அவதரித்தவன். இவன் சகோதரன்
வாசுகி, பாற்கடலை கடைய மத்தானவன். திரிபுரமெரிக்க சிவன் மேரு மலையை வில்லாக கொண்டபோது நாணாக பயன்பட்டவன்.
வாசுகியின் மகள் உலூபி என்ற நாக கன்னிகை அர்ஜுணனை மணந்து அரவானை பெற்றாள். மகாபாரத யுத்தம் துவங்க பலியாக கொடுக்கப்பட்டவன் அரவான்.
சங்க காலத்தில் நாகர் வழிபாடு சிறப்பாக இருந்ததற்கு சங்கப்புலவர்களின் பெயர்களாக நாகனார், இளநாகனார், நன்னாகனார், வெண்ணாகனார் என்ற பெயர்கள் வழி, வழியாக வந்துள்ளன.
ஆறு சமயங்களும் பாம்பும்
இந்த அரவம் என்னும் நாகப்பாம்பு ஆறு சமயப் ப,ம்பொருளுடன் எவ்வகையிலாவது தொடர்பு கொண்டுள்ளது.
1. காணபதியம்;
கணபதியின் ஆயுதமாகவும், கச்சாகவும், குடையாகவும் பாம்பு இருக்கிறது.
2. சைவம்;
சிவனுக்கு அணிகலனாகவும், ஆயுதமாகவும் பாம்பு பயன்படுகிறது. பாம்பு 'குடை' பிடித்தது போல் இருப்பது நாகலிங்கப் பூவாகும். லிங்கமும் 'நாகலிங்க' வடிவாகும்.
3. வைஷ்ணவம்;
ஆதிசேடன், விஷ்ணு படுக்கும் படுக்கையாகவும், சாய்ந்தால் அணையாகவும், இருந்தால் ஆசனமாகவும், நடந்தால் குடையாகவும், மரவடியாகவும் தொண்டு செய்வதால் அவன் திருவனந்தாழ்வான் என்ற சிறப்பு பெயர் பெறுகிறார்.
4. சாக்தம்;
சக்தியின் ஒரு வடிவமாக பாம்பு கருதப்படுகிறது. சமயபுரம் கருமாரி போன்ற பெண் தெய்வங்களுக்கு குடையாக இருப்பதும் நாகங்களே.
5. சௌரம்;
கிரகண காலங்களில் சூரியனையே பாம்புகள் விழுங்கி உமிழும் சக்தி கொண்டவை.
6. கௌமாரம்;
முருக வழிபாட்டிற்கு ஆதாரம் பாம்மு வழிபாடு என்றும் கூறப்படுகிறது. நாகங்கள் வாழும் காடுகளையும், மலைகளையும் காக்கும் முருகனின் வழிபாட்டுடன் நாகங்களும் வழிபடப்படுகின்றன.
பாம்பு வழிபட்ட திருத்தலங்கள்.
ஆதிசேடன் காலையில் திருக்குடந்தைக் கீழ்க்கோட்டத்திலும், உச்சியில் திருநாகேஸ்வரத்திலும், மாலையில் திருப்பாம்(பு) புரத்திலும், ஜாமத்தில் திருநாகப்பட்டினத்திலும் வழிபடுவதாக ஐதீகம்.
இவை தவிர கார்க்கோட நல்லூர், ஶ்ரீகாளஹஸ்தி, நாகர் கோவில், நாகமலை போன்றவையும் நாகங்களை வணங்கி வழிபடும் திருத்தலங்கள் ஆகும்.
இந்த பகுதி மிக நீண்டுவிட்டதால் இதன் தொடர்ச்சி பின்னர் வரும்.
அன்புடன்,
சேதுமாதவன் வெங்கட்ராவ்
ssssethu@gmail.com
Chennai, Tamilnadu, India
+919962859676/8838535445
Comments
Post a Comment