திருக்குர்ஆனும் திருக்குறளும்

 திருக்குர்ஆனும் திருக்குறளும்




நமது பாரத நாடு 'எல்லோரும் ஓர் குலம், எல்லோரும் ஓர் இனம், எல்லோரும் இந்நாட்டு மன்னர்' என்ற மதச்சார்பற்ற கோட்பாட்டை பல நூற்றாண்டுகளாக கடைபிடித்து வருகிறது. இங்கு மக்கள் மதங்களால் பிரிக்கப்படுவதில்லை. தனி நபர் சுதந்திரம், வழிபாடு ஆகியவை இந்திய அரசால் எப்போதும் பாதுகாக்கப்பட்டு வருகிறது. இந்திய இறையாண்மைக்கு அச்சுறுத்தலோ, கேடோ, பயங்கரவாத தாக்குதலோ இல்லாதவரை யாருக்கும் எந்த துன்பமும் (பிற நாடுகளுடன் ஒப்பிடும்போது) ஒருபோதும் இல்லை என்பதே உண்மை.

இந்திய திருநாட்டில் இஸ்லாமிய சகோதரர்கள் ஒரு தாய் வயிற்றுப்பிள்ளைகள் போலவே பழகி வருகிறார்கள். பரஸ்பர ஒற்றுமையும் விழாக்காலங்களில் சேர்ந்து இருப்பதும் இதனை உணர்த்துகிறது.

இந்த பகுதியில் நமது இஸ்லாமிய சகோதரர்களின் இறை நூலான 'திருக்குர்ஆனை' பற்றி ஒரு முன்னுரையும் அதனை ஒப்புதலளிக்கும் வகையில் உலகப் பொதுமறையாம் 'திருக்குறளில்' கூறப்பட்டிருக்கும் சில குறள்களை மேற்கோள் தந்து இவை இரண்டும் ஒத்த கருத்தினையே வலியுறுத்துகின்றன என்பதை தெளிவாக்க முயற்சித்துள்ளேன்.

இங்கு நான் குறிப்பிட்டிருக்கும் 'திருக்குர்ஆன்' சென்னை, பெரம்பூர் நெடுஞ்சாலையில் உள்ள இஸ்லாமிய நிறுவனம் ட்ரஸ்ட் பதிப்பித்த புத்தகமாகும். இதிலிருந்து சில பகுதிகளை எடுத்து எழுத வாய்ப்பளித்த அந்த நிறுவனத்திற்கு நன்றி. (இது நான் சென்னை புத்தக கண்காட்சியில் வாங்கிய நூலாகும்)

திருக்குர்ஆனைப் படிக்க முற்படுமுன் இதனின் அடிப்படையையும், மையக்கருத்தினையும் அறிந்து கொள்ளுதல் அவசியமாகும். இதனை இறைவனின் கட்டளைப்படி சமர்ப்பித்தவர் முஹம்மத் (ஸல்) அவர்கள் என்பதையும், அவர் இந்த மறையின் அடிப்படை விஷயங்கள் என கீழே கொடுத்துள்ளவற்றை ஏற்றுக் கொள்ள வேன்டும் என்பதும் அவசியமாகும்.

  1. சர்வ வல்லமையுள்ள இறைவன் இப்பிரபஞ்சத்தின் படைப்பாளனும், உரிமையாளனும், ஆணையாளனுமாயிருக்கின்றான். அவனே இப்பூமியில் மனிதனைத் தோற்றுவித்து உணரவும், சிந்திக்கவும், அறியவும் வேண்டிய ஆற்றலை அளித்து, நல்லது எது, தீயது எது என்று பகுத்தறியக்கூடிய அறிவையும் தந்தான். வாழ்க்கைச் சாதனங்களை தந்து அதனை பயன் படுத்தும் சுயாதிகாரத்தை (Autonomy) தந்து, அவனை இப்பூவுலகில் தன்னுடைய பிரதிநிதியாய் (delegate) ஆக்கினான்.
  2. மனிதனைத் தன் கலீஃபாவாக (பிரதிநிதியாக) நியமித்தபோது அவனுடைய நிலை பற்றிய அடிப்படைகளை தெளிவாக இறைவன் அறிவித்து விட்டான். ''உங்களுடையவும், அனைத்து உலகங்களுடையவும் உரிமையாளனும், வணக்கத்திற்குரியவனும், ஆணையாளனும் நான்தான். என்னுடைய இந்த பேரரசில் நீங்கள் சுயாதிகாரம் உள்ளவர்களோ, பிறருக்கு அடிமைப்பட்டவர்களோ இல்லை. நீங்கள் எனக்கு மட்டுமே கீழ்ப்படிவதற்கும், அடிபணிவதற்கும், வணங்குவதற்குரியவர்கள். உங்களுக்கு சில அதிகாரங்கள் வழங்கப்பட்டு இவ்வுலகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளீர்கள். இது ஒரு குறித்த காலத்திற்கு மட்டுமே நீடிக்கும். அதன் பின்னர் நீங்கள் என்னிடமே திரும்பி வர வேண்டியவர்களாய் இருக்கின்றீர்கள். நீங்கள் இவ்வுலகை தேர்வுக்கூடமாக கருதி வாழ்க்கை நடத்த வேண்டும். இந்த தேர்வில் உங்களை பரிசீலித்து யார் தோல்வி அடைந்தீர்கள் என்பது தீர்வானால், மறுமையில் என்னுடைய இறுதித் தீர்ப்பில் வெற்றி பெறுவதே உங்கள் அடிப்படை நோக்கமாக அமைய வேண்டும். இதை மனதில் கொண்டு உண்மையின் அடிப்படையில், சீரிய-நேரிய ஒழுங்கு முறையில் வாழ்வதே சிறப்பாகவும், இதனை மேற்கொண்ட உங்களுக்கு உலகில் அமைதியும், பாதுகாப்பும், என்னிடம் திரும்பி வரும்போது ஜன்னத் - சொர்க்கம் எனும் நித்திய சுகத்தையும், நிலையான பேரின்ப வீட்டையும் உங்களுக்கு அளிப்பேன். இதனை தவிர்த்து உங்களுக்குண்டான முழு சுதந்திரத்தினால் வேறு முறையில் நடந்தால் உலகில் குழப்பம், அமைதியின்மை ஆகியவற்றால் நீங்கள் துயருற்று என்னிடம் மீளும்போது நீங்காத துயரமும், வேதனயும் உள்ள நரகம் என்னும் படுகுழியில் தூக்கி எறியப்படுவீர்கள்'' என இறைவன் எச்சரித்து விட்டான்.
  3. இவ்வாறு எச்சரித்த பிறகு பூவுலகின் முதல் மனிதர்களான ஆதம் (அலை) ஹவ்வா ஆகியிருவர்களை தோன்றச் செய்து அவர்களும் அவர்களுடைய சந்ததியினரும் பின்பற்றிச் செயல்பட வேண்டிய அறிவுரைகளை வழங்கினான். ஆதிமனிதர்களான இவர்களும் இறைவனுக்கு அடிபணிவதாக (இஸ்லாமாக) வாழ்க்கை நடத்தியும் இவர்களின் சந்ததியர்களுக்கும் அதனையே அறிவறுத்தினர். ஆனால் இவர்களின் வழித்தோன்றல்கள் சில நூற்றாண்டுகளுக்கு பின் இந்த நெறி முறையை (தீனை) விட்டு தவறான பாதைகளில் செல்லலாயினர். ஒழுக்க நியதிகளை (ஷரி-அத்தை) கைவிட்டு விலகி, அதனை அலங்கோலப்படுத்தி, தம் இச்சைகளுக்கும், விருப்பு, வெறுப்புகளுக்கும் ஏற்ப சட்ட திட்டங்களை ஏற்படுத்திக் கொண்டனர். இதனால் பூமி அநீதியாலும், கொடுமைகளாலும் நிரம்பிவிட்டது.
  4. இவ்வாறு நடக்க ஆரம்பித்தவுடன் இறைவன் தான் நிர்ணயித்த காலத்திற்கு முன் அவர்களை அழிக்க முற்படவில்லை. அவர்களை நேர்வழியின் பால் திரும்பி வரக் கட்டாயப்படுத்தவுமில்லை. மாறாக அவர்களை நேர் வழியில் மாற்றும் பொறுப்பை தானே ஏற்றுக் கொண்டு தன் விருப்பத்தையே செயல் படுத்தக்கூடிய அடியார்களை தன் தூதர்களாக நியமித்தான். தான் முன்னர் போதித்த நெறி முறைகள் படி அவர்கள் அந்த சந்ததியாரை நேர்வழியில் மாற்ற பணித்தான்.
  5. இந்த இறைத் தூதர்களும் ஆதி மனிதர்களுக்கு காண்பிக்கப்பட்ட ஒழுக்கவியல், சமூகவியல் முறையிலே தங்களது பணியில் குறிக்கோளுடன் இருந்தனர். அவையும் சில காலக் கட்டுப்பாட்டிற்கு பிறகு மீண்டும் இறை வழிகாட்டுதல்களை மாற்றி அனைத்தையும் குழப்பிவிட்டனர்.
  6. இறுதியாக, அனைத்துலகங்களின் இறைவன், முஹம்மத் (ஸல்) அவர்களை அரபு நாட்டில் தோற்றுவித்தான். முந்திய நபிமார்கள் விட்ட பணியை நிறைவேற்றும் பொறுப்பில் அண்ணல் நபி (ஸல்) அவர்களை அமர்த்தினான்.ஆதி மனிதருக்கு காண்பிக்கப்பட்ட நேரிய வாழ்க்கை முறையை மேற்கொள்ளும்படி அனைவருக்கும் அழைப்பு விடுத்து இறைவன் அறிவுரையை அனைவரையும் எட்டச் செய்து அதனை ஏற்றுக் கொள்வோரை ஒரு புறம் தங்களது வாழ்க்கையை இறைநெறியின் அடிப்படையில் அமைத்துக் கொள்ளவும், மறுபுறம் அதற்கு இசைவாக உலகை சீர்திருத்தவும் பாடுபடக்கூடிய ஒரு குழுவாக (உம்மத்தாக) அமைத்து விடுவதுதான் அண்ணல் நபி (ஸல்) அவர்களிடம் ஒப்படைக்கப்பட்ட பணியாக இருந்தது. மேற்சொன்ன அழைப்பையும், நல்லுரையையும் கொண்ட வேத நூல் தான் அல்லாஹ் முஹம்மத் (ஸல்) அவர்களுக்கு அருளிய அல்குர் ஆன் ஆகும்.
திருக்குர் ஆனின் விவாதிக்கும் பொருள் (subject) மனிதனைப்பற்றியதாயிருக்கிறது.
திருக்குர் ஆனின் மையக்கருத்து இறைவன், பிரபஞ்சத்தின் அமைப்பு முறை, இவற்றில் மனிதனுடைய நிலை, அவனுடைய இந்த வாழ்வு ஆகியவை பற்றி தன் புலனுணர்விற்கு மட்டுமே அடிப்படையாகக் கொண்டு மனிதன் ஏற்படுத்திக் கொண்ட கோட்பாடுகள், தத்துவங்கள், மன இச்சைகளுக்கு அடிமைப்பட்டு வகுத்துக்கொண்ட அடிப்படையில் தவறான கொள்கைகள்.
திருக்குர் ஆனின் குறிக்கோள் மனிதனை நேர்வழியின்பால் திருப்புவது.

உண்மைக்கு மாறான வாழ்க்கைப் போக்குகளின் தவற்றையும் அதனால் இறுதியில் ஏற்படும் இழப்பையும் தெளிவாக எடுத்துரைத்து, உண்மைகளுக்கு இயைந்த - இறுதியில் வெற்றியையும், நற்பேற்றையும் அளிக்கக்கூடிய வாழ்க்கை முறைகளை கொடுப்பதே திருக்குர் ஆனின் தலையாய நோக்கமாகும்.

திருக்குறள் கூற்று

உலகப் பொதுமறையாம் திருக்குறள் தமிழ் மொழியின் தலையாய நூல். மொழி வேறுபாடின்றி படித்தோரெல்லாம் பாராட்டும் நூல். இரண்டடிக் குறளுக்குள் வாழ்க்கைக்குத் தேவையானது அனைத்தும் பொதிந்து கிடக்கிறது. அழகும் எளிமையும் பொதிந்தது.

கோளில் பொறியில் குணமிலவே எண்குணத்தான்

தாளை வணங்காத் தலை

தத்தமக்கு ஏற்ற புலன்களை கொள்கை இல்லாத பொறிகள் போல பயன் படுத்தாமல் இருப்பது சிறப்பில்லை. எண் குணங்கள் என்பவை தன் வயத்தன் ஆதல், தாய உடம்பினன் ஆதல், இயற்கை உணர்வினன் ஆதல், முற்றும் உணர்தல், இயல்பாகவே பாசங்களை விட்டொழித்தல், பொருள் உடைமை, முடிவில்லாத ஆற்றல் கொண்டிருப்பது, பேரருள் உடைமை, வரம்பு இல் உடைமை என்பன. காணாத கண் இருத்தும் பயனிலாதது போல் இறைவனை நினைத்தலும், வாழ்த்துதலும்,வணங்குதலும் செய்யாதது குற்றம் எனப்படும்.

ஒழுக்கத்து நீத்தார் பெருமை விழுப்பத்து

வேண்டும் பனுவல் துணிவு

தமக்குரிய ஒழுக்கத்தின் கண்ணே நின்று மறைந்தவர்களின் செல்வங்களில் இதுவே ஏற்புடையது ஆகும்.

தமக்குரிய ஒழுக்கத்தின் கண்ணே நின்று துறத்தலாவது தத்தம் வருணத்திற்கும் (குலம்,ஜாதி) நிலைக்கும் உரிய ஒழுக்கங்கள் வழுவாது ஒழுக அறம் வளரும். அறம் வளரப் பாவம் தேயும்;பாவம் தேய அறியாமை நீங்கும்; அறியாமை நீங்க நித்த, அநித்தங்களது வேறுபாட்டு உணர்வும், அழிதல் மாலையவாய இம்மை மறுமை இன்பங்களின் உவர்ப்பும் பிறவித் துன்பங்களும் தோன்றும். அவை தோன்ற வீட்டின் கண் ஆசை உண்டாம்; அஃது உண்டாக, பிறவிக்குக் காரணமாகிய 'பயன் இல்' முயற்சிகள் எல்லாம் நீங்கி, வீட்டிற்கு காரணமாகிய யோக முயற்சி உண்டாம். அஃது உண்டாக மெய்யுணர்வு என்பது பிறந்து புறப்பற்று ஆகிய 'எனது' என்பதும் அகப்பற்று ஆகிய 'யான்' என்பதும் விடும். ஆகலான், இவ்விரண்டு பற்றையும் இம்முறையை தவிர்த்துவிடுதல் எனக் கொள்ளலாம். 'பனுவல்' என்பது பொதுவாக அனைத்திற்கும் ஒத்த துணிவு என்று கொள்ளப்பட்டது.

வீழ்நாள் படாஅமை நன்றாற்றின் அஃதொருவன்

வாழ்நாள் வழி அடைக்குங் கல்

ஒருவன் அறத்தைச் செய்யாமல் வீணாகக் கழிக்கும் நாட்கள் அவன் இறக்கும் நாள் அன்று தீராத துன்பத்தை தந்து அவன் கடைத்தேறாமல் வழியை மறித்து நிற்கும்.

ஐவகைக் குற்றத்தான் வரும் இருவகை வினையும் உள்ள துணையும் உயிர் யாக்கையோடு கூடி நின்று அவ்வினைகளது இருவகைப்பயனையும் நிகராமல் செய்யும். ஐந்து வகை குற்றங்கள்; அவிச்சை, அகங்காரம், அவா, விழைவு, வெறுப்பு, என்பன. இரு வினைகள் நல்வினையும், தீவினையும்.  இது 'பஞ்சக்கிலேசம்' எனப்படும்.

நல்லாற்றல் நாடி அருளாள்க பல்லாற்றால்

தேரினும் அஃதே துணை

அளவைகளாலும் பொருந்தும் ஆற்றானும் நன்றான நெறியிலே நின்று நமக்குத் துணையாம் அறம் யாது என்று ஆராய்ந்து அருளுடையராகவேண்டும். பல விதமான ஆற்றல்கள் இருப்பினும்  திணையாக வருவது இறைவனின் அருளே.

இங்கு அளவைகள் என்பவை; பொறிகளால் காணும் காட்சி, குறிகளால் உய்த்துணரும் அனுமானமும், கருத்தாமொழி ஆகிய ஆகமும் இங்ஙனம் அன்று ஆயின் இது கூடாது என்று உணரும் அருந்தா பத்திநும், உண்மைக்கு மாறான இன்மையும் ஆகிய ஆறு நிலைகளாகும்.

வஞ்ச மனத்தான் படிற்றொழுக்கம் பூதங்கள்

ஐந்தும் அகத்தே நகும்

வஞ்சம் பொருந்திய மனத்தை உடையவனது மறைந்த ஒழுக்கத்தை கண்டு ஐந்து பூதங்களும் உடம்பால் அவனுடனே கலந்து நிற்கின்ற போது தம்முள்ளே சிரிக்கும்.

காமம் தன் கண் முன்னே தோன்றி நலியா நிற்கவும், அதனது இன்மை கூறி புறத்தாரை வஞ்சித்தலின் வஞ்சமனம் என்றும், அந்நலிவு பொறுக்கமாட்டாது ஒழுகும் களவு ஒழுக்கத்தை 'படிற்று ஒழுக்கம்' என்றும், உலகத்துக் களவுடையார் பிறர் அறியாமல் செய்தவற்றிற்கு ஐம்பெரும் பூதங்கள் சாட்சியாதலின், அவ்வொழுக்கத்தையும் அவன் மறக்கின்ற ஆற்றலையும் அறிந்து அவன் அறியாமல் தம்முள்ளே நகுதலின் 'அகத்தே நகும்' என்றாயிற்று. செய்த குற்றம் மறையாது ஆதலின், அவ் வொழுக்கம் ஆகாது என்றானது.


திருக்குறளின் 1330 குறட் பாக்களில் இன்னும் சிறப்புடைத்தது உள்ளது எனினும், நாம் திருக்குர் ஆனில் கூறியவற்றிற்கு இவை பயனுடைய பொருட்களை தந்துள்ளது என்னும் உணர்வுடன் இதனை நிறைவு செய்கிறோம்.

ஆக்கமும், பதிவும்;

சேதுமாதவன் வெங்கட்ராவ்

ssssethu@gmail.com

Chennai, Tamilnadu, India

+919962859676/8838535445

Comments

Popular posts from this blog

Business and Career - An Astrological perspective

காதலும் திருமணமும் - ஜோதிட பார்வை

Love and Marriage - Astrological views