காலத்தால் அழியாத காமன்
படைத்தல், காத்தல், அழித்தல் என்ற மூன்று செயல்களுக்கும் கருப்பொருளாக அமைந்தது மனித குலமே. மனித குலத்தைப்படைத்த இறைவனே அவற்றிற்குத் தேவையான வாழ்வாதாரங்களையும் படைத்தான். அதனைக் காக்கும் தொழிலையும் தான் வகுத்த நியதிகளின் வரைமுறைகளை மனிதகுலமும் அவன் சார்ந்த அனைத்தும் மீறும்போது அவனே அனைத்தையும் அழித்தான்.
படைக்கும் தொழிலை ஏற்ற பிரம்மனுக்கு படைப்பின் மூலாதாரத்தை கற்பித்தவர்கள் காமேஸ்வரன், காமேஸ்வரியாக விளங்கும் அம்மையப்பனே ஆவர். மூலாதாரத்தில் (முதுகுத்தண்டின் அடிப்பாகத்தில் உள்ள சக்கரம்) அவர் ஜீவன்களுக்கு இன்பம் பெருக்கிக் காமவாழ்வு அளித்தவர். அவரே ஈசானராக வெளிப்படும்போது காமத்தை அழித்து ஞானத்தைக் கொடுப்பவராகிறார்.
அதனாலே ஈசானமூர்த்தியே காமேஸ்வரன், காமேஸ்வரியாக மூலாதாரத்தில் விளங்குபவர்.
நீநந்து மூலா தாரத்தில் ஆனந்த
நிர்த்தம் இடும் இறைவி நின்னோடு
ஆனந்த தாண்டவம் விளைத்து நவவடிவு பெறும்
ஆதி சிவனை் பரவுவாம்
வானம் தொடுத்து உலகம்அடையப் படைத்துஇடும்இவ்
வகையின் புணர்ச்சி அலவோ?
ஞானங்கொள் அனை, தந்தை என உலகு தெளிவுற
நடத்துவது ஞான ஒளியே
என்று ஆனந்தலஹரியில் கலவி இன்பம் பற்றி பரிபாஷையில் கூறப்பட்டுள்ளது.
மனித மனங்களுக்கு இடையே காதல் உணர்வுகளை்த் தூண்டி அவர்களை இன்பம் துய்க்க வைக்கும் தெய்வமாய் இருப்பவன் காக்கும் கடவுள் திருமால், திருமகளின் மனத்துதித்த 'மன்மதன் என்னும் காமன்' அவன் தேவி 'ரதி' என்பவளாவாள்.
காமனின் பிற பெயர்கள்;
மனோபவன், மனேரசன், மனோபு, சித்தசன், மதன், உருவமில்லாத அநங்கன், ரதிக்கு மட்டும் தெரியும் அங்கசன், மாரன், அறிவை மயக்கும் மோகன், விருப்பத்திற்கு உரிய வேள், இளவேனித்திற்கு உரிய வேனிலான், சம்பராசுரனை வதைத்த சம்பராரி, கரும்பு வில்லேந்திய கரும்பு வில்லாளன், வில்லி, மலரம்புகள் ஐந்தினை உடைய பஞ்சபாணன், ஐங்கனைக் கிழவன், தாழம்பூவை வாளாகக் கொண்ட பூவாளி, திங்களைக் குடையாகக் கொண்ட திங்கள் வெண்குடையான், தென்றலைத் தேராகச் செலுத்தும் தென்றல் தேரினன், கடலை முரசாகக் கொண்ட கடல் முரசன், மீன் இலச்சினை கொண்ட மீன் கொடியோன், மகரமுயர்த்தோன்.
ரோம் நாட்டில் 'CUPID' என்றும், கிரேக்க நாட்டில் 'EROS' என்றும் கையில் வில்லம்பினை ஏந்திய இளைஞனாய் தோன்றும் தெய்வம்.
காமனது பொருட்கள் அதன் கருப்பொருள்
- வில் கரும்பு
- நாண் வண்டுகள்
- ஐந்து அம்புகள் ஐந்து மலர்கள்
- வாள் தாழம்பூ
- படைவீடு சோலை
- படைகள் மகளிர்
- தேர் தென்றல்
- குதிரை கிளி
- யானை இருள்
- வாகனம் அன்னம்
- முரசு கடல்
- கொடி மீன்
- குடை சந்திரன் (நிலா)
- மாலை இலஞ்சி
- கமுகம்பாளை கவரி
- எக்காளம் குயில்
காமன் காட்டும் புலன் உணர்வு
- மெய் தென்றல்
- வாய் கரும்பு
- கண் சோலை
- மூக்கு மலர்களின் மணம்
- செவி குயிலின் இசை, கிளிப் பேச்சு
காமனின் வில் இராமன், அருச்சுன்னின் விற்களை விடக் கடுமையானது.
காமனின் வில்லிற்குரிய ஐந்து தண்டுகள் 1. கதிர்ப்பூம் பச்சைத் தண்டு 2. மாந்தண்டு 3. மல்லிகைத் தண்டு 4. கரும்புத் தண்டு 5. தாமரைத் தண்டு
வில்லின் ஐந்து நாண்கள் 1. பிச்சிக் கொடி 2. தாமரை நூல் 3. வெட்டிவேர் 4. வண்டுகளின் வரிசை 5. மாந்தளிர்
காமன் வில்லின் ஐந்து அம்புகள் 1. தாமரை 2. மா 3. அசோகு 4. முல்லை 5.நீலம்
- காதலுற்ற பெண்களின் மீது காமன் தாமரை மலரம்புகளை தொடுத்தால், அவர்கள் தங்கள் தம் காதலரை இடையறாது நினைப்பார்களாம்.
- மா மலர் அம்புகளை எய்தால், அவர்களது உடல் முழுதும் பசலை நோய் படருமாம்.
- அசோக மலர் அம்புகளை விடுத்தால், அவர்கள் எப்போதும் காதலர் நினைவாக இருப்பதுடன், உணவும் உணைண மாட்டார்களாம்.
- முல்லை மலர் அம்புகளை எறிந்தால், அவர்களது காதல் நோய் வரம்பு கடக்க, அவர்களும் படுக்கையில் கிடக்க நேரிடுமாம்.
- முடிவாக, நீல மலர்களை விட்டால், அவர்கள் காதல் நோயால் இறந்து விடுவார்களாம்.
காமன் எய்யும் மலரம்புகள் காதல் உணர்வை தோன்றவும், பெருகவும், அதன் உணர்வுகள் படிப்படியாக அதிகரிக்கச் செய்து முடிவில் இறப்பு என்ற உச்ச நிலையை அடைகின்றன என்பது முழு உண்மை.
கரும்பையும், கரும்பு வில்லையும் கைகளில் ஏந்திய தெய்வங்களும், ஞானியும் உண்டு.
யோக சாத்திரத்தின் மூலக் கடவுள் விநாயகரது கையில் இருக்கின்ற கரும்பு வில், இவர் காமத்தை வென்றவர் என்பதன் அறிகுறியாகும். இந்த கரும்பு வில் யோகத்தின் சின்னம்.
காமாட்சி, மீனாட்சி, அபிராமி, புவனேஸ்வரி, ராஜராஜேஸ்வரி ஆகியோர் போகப் பொருட்களை அருள்கின்றனர். இவர்கள் கையில் இருக்கும் கரும்பு போகத்தின் சின்னம்.
ஞானி பட்டினத்தாரும் ஒரு கரும்பை கையில் ஏந்தியவர். இவர் ஞான நெறியில் முக்தி பெற்றவர். இவர் கையில் இருக்கும் கரும்பு ஞானத்தின் சின்னம்.
காமனின் கையில் இருக்கின்ற கரும்பு வில் காமத்தின் சின்னம்.
சூரபதுமன் முதலிய அரக்கர்களின் தொல்லை அழிய, சிவனின் பேராற்றலுடைய மகனாக முருகன் அவதரிக்க யோக நிலையில் இருந்த சிவனின் தவத்தை தனது காம பாணங்களால் கலைத்து அதனால் அவரின் நெற்றிக் கண்ணால் காமன் சாம்பலானான்.
சிவபெருமான் காமனை எரித்த திருத்தலம் திருக்குறுக்கை என்னுமிடம்.
காமன் எரிந்ததும் படைப்புத் தொழில் நின்று பொயிற்று. காதல் இல்லை, காமம் இல்லை, புணர்ச்சி இல்லை. பிறப்பு இல்லை, நின்று போயிற்று. பிரம்மன் சிவனிடம் முறையிட சிவனின் அருளால் மீன்டும் மீன்டான் காமன். எனவே காலத்தால் அழியாதவனாக, மனித குலம் உட்பட அனைத்து ஜீவன்களையும் தன் வயப்படுத்துபவன் காமன்.
காமனை உயிருடன் மீளத் தருமாறு சிவனை ரதி வணங்கி வேண்ட, சிவனும் காமன் அருவமாய் இருக்குமாறும், ஆனால் ரதிக்கு மட்டும் உருவமாய் புலப்படுமாறும் வரம் தந்து, காமனுக்கு உயிரும் அருளினார். மேலும் கிருஷ்ணாவதாரத்தில் பிரத்யும்ன்னாகக் காமன் பிறப்பான் என்றும் அருள் புரிந்தார்.
கிருஷ்ணாவதாரத்தில் ஶ்ரீகிருஷ்ணர், ருக்மணிக்கு மகனாக 'பிரத்யும்னன்' என்ற பெயரில் காமன் பிறந்தான் ரதி மாயாவதியாகப் பிறந்து காமனை மணந்தாள்.
இந்த பதிவில் மதிப்பிற்குரிய டாக்டர். டி, செல்வராஜ் எம்,ஏ; எம்.பில்; பி.எச்டி (ஓய்வு) மாநிலக் கல்லூரி மற்றும் உலகநாத நாராயணசாமி அரசு கல்லூரி தமிழ்ப் பேராசிரியர் எழுதிய 'இலக்கியங்களில் வழிபாடுகள்' என்ற புத்தகத்திலிருந்து சில பகுதிகள் எடுத்தாளப்பட்டிருக்கின்றன என்பதையும் அதற்காக அவருக்கு எனது நெஞ்சார்ந்த நன்றியினையும், வணக்கத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
கருத்தும், ஆக்கமும்;
சேதுமாதவன் வெங்கட்ராவ்
ssssethu@gmail.com
சென்னை, தமிழ்நாடு, இந்தியா.
+919962859676ழ8838535445
Comments
Post a Comment