அகநானூறு கூறும் தள்ளாமை - மானிடம், விலங்கினம், பறவையினம்
அகநானூறு கூறும் தள்ளாமை - மானிடம், விலங்கினம், பறவையினம்
இன்றைய உலகின் மிகப்பெரும் போராட்டம் முதியோர்களுடையதே. தள்ளாத வயதில் பெற்ற மக்கள் மற்றும் உறவினரின் புறக்கணிப்பு, மக்கள் நல்லவர்களாக இருந்து காப்பாற்ற முயன்றாலும் வம்புகளால் அதனை ஒதுக்குதலும், முதிய தாய்தந்தையர்க்கு கஞ்சி வார்க்காமல் அவர்களை சம்பளம் இல்லாத வேலைக்காரர்களாக, அடிமைகளாக நடத்தும் பாவம், இந்த கொடுமையினால் மானத்தை விட்டேனும் வயிறு வளர்க்க பல இடங்களில் நின்று பிச்சை எடுக்கும் நிலை, கண் தெரியாமலோ, காதுகேளாததாலோ அவர்கள் முதுமையில் படும்பாடு 'நல்ல மக்கட்பேறு என்பது' அவர்களுக்கு கிட்டாததே.
பொல்லாத வயிற்றுக் கவலை தள்ளாத வயதில் இருக்கக் கூடாது என்று முன்னோர் நன்றியறிதலை ஒரு அறமாக்கி, தந்தை, தாயினை போற்றுவது தலையான தொண்டு என்றும், 'அன்னையும் தந்தையும் முன்ன்றி தெய்வம்' என்றார்கள்.
பண்படாத மக்களைத் திருத்த வழி இல்லை. ஏழை மக்களுக்கு பெற்றோருக்கு தொண்டு செய்ய மனத்தில் அன்பு இருந்தாலும், வாழ்க்கைப் போராட்டம் இடம் தருவதில்லை.
சில மேலை நாடுகளில் வயதானவர்களுக்கு முதுமைப் பணம் தந்து (முதுமைக் காப்பீட்டு நிதி மூலம்) உதவினாலும் உதவி பற்றாக்குறை அங்கும் தள்ளாதவர்கள் பலர் இருக்கவே செய்கின்றனர்.
இயற்கை இந்தக் குறையை தீர்க்க சாக்காடு என்ற முறையில் தள்ளாதவர்களை மேலுலகத்திற்கு அழைத்துச் செல்கிறது.
இவ்வாறு தள்ளாமை அமைத்து தொல்லைப்படுத்தும் இயற்கை பறவைகளிடத்திலும், விலங்குகளிடத்திலும் இரக்கம் காட்டுகிறதா என்ன? அவைகளின் வழிகளும் அதற்கு ஏற்றாற் போல் தான். அவை எப்போதும் பகைக்கு இடையே வாழ்கின்றன. வல்லமை உள்ளவரை பகையை வென்று அல்லது தப்பித்து வாழ்கின்றன. தள்ளாமையின் போது பறவைகளிடமோ அல்லது விலங்கிடமோ சிக்கி இரையாகின்றன. அதிலும் தப்பினால் மனிதனால் அவற்றிற்கு துன்பமே. தமிழ்ப் புலவர்கள் உடல் தளர்வுற்ற காலத்தே அவற்றின் வாழ்வை கண்ணால் கண்டும், கற்பனையால் உணர்ந்தும் பாடல்களால் பாடி உள்ளனர்.
அகநானூறு 106ம் பாடல் வரிகள்
பொறியகைத் தன்ன பொருபல சிறுமீன்
வெறிகொள் பாசடை உணீஇயர்பைப்பயப்
பறைதபு முதுசிரல் அசைபுவந் திருக்கும் துறை...
சிரல் எனும் மீன் பொத்திப் பறவை ஒரே பாய்ச்சலாக நீரில் நேரே பாய்ந்து கொத்தி எடுத்துச் செல்லும். இது அது மிகுந்த ஆற்றலுடன் இருக்கும் போது. ஆனால் அதற்கு முதுமை வந்து விட்டால் முன் போல் நொடிக்குள் பாயும் வேகம் இருக்காது. அப்போது நீர் நிறைந்த குளத்தில் உள்ள நீர்ப்பூக்களின் மேல் கிழப்பறவை அமர்ந்து இலைகளைச் சுற்றித் திரியும் சிறு மீன்களைப் பிடித்து உண்ணுமாம். இலையில் அமர்ந்த பொழுதில் அக்கிழப்பறவை அசையாது அமர்ந்திருப்பதால் அசையாத உரிவத்தைக் கண்டு மீன்கள் ஓடுவதில்லை. அவ்வாறு இக் கிழப் பறவைகள் தங்களின் உணவை கொள்கின்றன.
காட்டில் கிழ நரி எப்படி வாழும்? தந்திரத்தால் வாழ வகையில்லை. பருந்து கூடு கட்டியுள்ள மரங்களின் கீழே காத்துக் கொண்டிருக்குமாம். அந்தப் பருந்து தன் குஞ்சுகளுக்கு ஏதாவது உணவு கொத்திக்கொண்டு வந்து வாயில் ஊட்டும் போது அவைகளில் நழுவி விழும் உணவு இந்த கிழ நரிக்கு உணவாகுமே. சில வேளைகளில் பருந்து கொணரும் உணவின் பங்கு வழுவழுப்பாக இருந்தால் அது பருந்தின் வாயில் இருந்து விழுந்து நரியின் உணவாகுமாம்.
அகநானூனு 193ம் பாடல் வரிகளில்
எருவை, குறும்பொறை எழுந்த நெடுந்தாள் யாஅத்து
அருங்கவட் டுயர்சினைப் பிள்ளை ஊட்ட
விரைந்துவாய் வழுக்கியே கொடுங்கண் ஊன்தடி
கொல்பசி முதுநரி வல்சி ஆகும்.
மானிட சமுதாயம் மட்டுமே பிறரை அண்டி வாழும் நிலையில் உள்ளது. இறந்த பின்னும் உடலை எரிக்கவோ, புதைக்கவோ செய்தாக வேண்டும். பறவை, விலங்குகளைப் போல் மற்றவைகளுக்கு அவை பயன் படுவதில்லை. (பார்சி இன மக்களின் கோட்பாடுகளை மதித்து இங்கு அது குறிப்பிடப்படவில்லை).
ஆக்கமும், பதிவும்;
சேதுமாதவன் வெங்கட்ராவ்
சென்னை, தமிழ்நாடு, இந்தியா
+91 8838535445
ssssethu@gmail.com
Comments
Post a Comment